President of India
பிரதம அமைச்சர்
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 74(1) குடியரசுத் தலைவருக்கு உதவிடவும், அறிவுரை வழங்கிடவும் பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு நடுவண் அமைச்சரவைக் குழு இருக்கும் எனக் குறிப்பிடுகிறது.
இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவியானது வெஸ்மின்ஸ்டர் அரசியலமைப்பு ஜனநாயக முறையில் இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. (இங்கிலாந்தின் நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மையில் அமைந்துள்ளதால் அவர்களின் நாடாளுமன்ற முறை வெஸ்ட்மினிஸ்டர் முறை என்றழைக்கப்படுகிறது).
மக்களவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரை பிரதம அமைச்சராகக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
மற்ற அமைச்சர்களை பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
மக்களவையில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் இல்லையெனில் குடியரசுத் தலைவர் எந்தக்கட்சி அமைச்சரவையை அமைக்க முடியுமோ அக்கட்சியின் தலைவரை அவர் அழைத்து அரசு அமைக்கக் கூறலாம்.
குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணமும், இரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைக்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதவர் கூட அமைச்சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.
அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்தமாகவும் மக்களவைக்கு பொறுப்புடையவர்களாவர்.
தகுதிகள்:
- இந்திய அரசியலமைப்பில் (சட்டப்பிரிவு 84 & 75) குறிப்பிடப்பட்டுள்ளன:
- இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
- லோக்சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்ச வயது - 25 வயது (லோக்சபா)
- ராஜ்யசபா உறுப்பினராக இருந்தால் - குறைந்தபட்ச வயது 30 வயது
- பாராளுமன்ற உறுப்பினராக (MP) இருக்க வேண்டும் அல்லது தேர்வு செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் MP ஆக வேண்டும்.
- அரசு ஊழியராக இருக்கக்கூடாது.
தேர்வு செய்யும் முறை:
- பிரதமர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவதில்லை.
- பாராளுமன்றத்தின் கீழ் சபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு பெறும் கட்சியின் (அல்லது கூட்டணியின்) தலைவரை ஜனாதிபதி பிரதமராக நியமிப்பார்.
- பெரும்பான்மை இல்லை என்றால், ஜனாதிபதி, பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடியவரை பிரதமராக நியமிப்பார்.
- பதவியேற்ற பின், பிரதமர் தனது அமைச்சரவையை அமைத்து, ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.
பிரதம அமைச்சரின் செயல்பாடுகளும், கடமைகளும்:
- அரசியலமைப்பு சட்டப்பிரிவு 78 பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
- பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
- தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, நிகழ்ச்சி நிரல் (Agenda) குறித்து முடிவு செய்வார்.
- காபினெட் அமைச்சரவை கூட்டம் நடைபெறாத பொழுது பிரதம அமைச்சர் தனது மூத்த சகாக்கள் இருவர் அல்லது மூவரை இயல்பாகக் கலந்தாலோசிக்கலாம்.
- பிரதம அமைச்சர் பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
- நடுவண் அரசின் விவகாரங்கள் மற்றும் சட்டத்திற்கான முன்மொழிவுகள் போன்ற அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருடன் விவாதிக்கிறார்.
- பிரதம அமைச்சர் என்பவர் குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
- பிரதம அமைச்சர் நாட்டின் உண்மையான தலைவராவார். அவர் நாட்டின் முக்கிய செய்தித் தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
- சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பிரதமர் பங்கு கொள்கிறார்.
பிரதம அமைச்சரின் முக்கிய அதிகாரங்கள்:
அமைச்சரவை தொடர்பான அதிகாரங்கள்:
- அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வது
- அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குதல் மற்றும் மாற்றுதல்
- அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்லுதல் அல்லது நீக்க பரிந்துரை செய்தல்
- அமைச்சரவை கூட்டங்களை நடத்துதல் மற்றும் முடிவுகளை வழிநடத்தல்
ஜனாதிபதி தொடர்பான அதிகாரங்கள்:
- ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை இடையிலான முக்கிய தொடர்பாளர்
- பாராளுமன்ற கூட்டம் கூட்ட மற்றும் நிறுத்த ஆலோசனை வழங்குதல்
- ஆளுநர், தூதர், தேர்தல் ஆணையர் போன்ற நியமனங்களில் ஆலோசனை வழங்குதல்
பாராளுமன்ற தொடர்பான அதிகாரங்கள்:
- லோக்சபா தலைவராக செயல்படுதல் (அவர் உறுப்பினராக இருந்தால்)
- அரசின் வேலைத்திட்ட அட்டவணையை நிர்ணயித்தல்
- லோக்சபாவை கலைக்க பரிந்துரை செய்தல்
- அரசின் கொள்கைகளை விளக்கி பாதுகாத்தல்
நிர்வாக அதிகாரங்கள்:
- அனைத்து அமைச்சகங்களின் பணிகளை மேற்பார்வை செய்தல்
- அமைச்சகங்களுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்த்தல்
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை வடிவமைத்தல்
வெளிநாட்டு விவகாரங்கள்:
- சர்வதேச மாநாடுகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துதல்
- வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளில் கையெழுத்திடுதல்
அவசரகால அதிகாரங்கள்:
- தேசிய அவசரநிலை (அணிக்கை 352)
- ஜனாதிபதி ஆட்சி (அணிக்கை 356)
- நிதி அவசரநிலை (அணிக்கை 360) காலங்களில் முக்கிய முடிவெடுப்பவர்.
அமைச்சரவைக் குழு:
- தேர்தலுக்குப் பின்னர் பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் அமைச்சரவையை நியமிக்கிறார்.
- ஒட்டு மொத்த மக்களவை உறுப்பினர்களில் 15% மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக (பிரதம அமைச்சர் உட்பட) இருத்தல் வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது.
நடுவண் அமைச்சர்களின் வகைகள்:
நடுவண் அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
1. காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
2. இராசாங்க அமைச்சர்கள்
3. இணை அமைச்சர்கள்
காபினெட் அமைச்சர்கள்:
நிர்வாகத்தின் மையக் கருவை உருவாக்கும் மூத்த அமைச்சர்களின் முறைசாரா அமைப்பே காபினெட் ஆகும். காபினெட் அரசாங்கத்தின் பாதுகாப்பு, நிதி, வெளியுறவுக் கொள்கைகள், உள்துறை ஆகியவற்றின் முக்கிய முடிவுகளை எடுக்கிறது.
இராசாங்க அமைச்சர்கள்:
அமைச்சரவை குழுவின் இரண்டாவது வகையினரே இராசாங்க அமைச்சர்கள் ஆவர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பு அமைச்சராக செயல்படுகின்றனர். ஆனால் அழைப்பு விடுத்தால் மட்டுமே இவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வர்.
இணை அமைச்சர்கள்:
அமைச்சரவையில் மூன்றாவதாக, இணை அமைச்சர்கள் உள்ளனர். காபினெட் அமைச்சர்கள் (அ) இராசாங்க அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகளைச் செயலாற்றுவதில் இவர்கள் உதவி புரிகின்றனர்.
இந்திய பிரதமர்கள் பட்டியல் (ஆண்டு வாரியாக):
- ஜவஹர்லால் நேரு - 15 ஆகஸ்ட் 1947 முதல் 27 மே 1964 வரை (முதல் பிரதமர்)
- குல்சாரிலால் நந்தா (இடைக்கால) - 27 மே 1964 முதல் 9 ஜூன் 1964 வரை
- லால் பகதூர் சாஸ்திரி - 9 ஜூன் 1964 முதல் 11 ஜனவரி 1966 வரை
- குல்சாரிலால் நந்தா (இடைக்கால) - 11 ஜனவரி 1966 முதல் 24 ஜனவரி 1966 வரை
- இந்திரா காந்தி - 24 ஜனவரி 1966 முதல் 24 மார்ச் 1977 வரை
- மொரார்ஜி தேசாய் - 24 மார்ச் 1977 முதல் 28 ஜூலை 1979 வரை
- சரண் சிங் - 28 ஜூலை 1979 முதல் 14 ஜனவரி 1980 வரை
- இந்திரா காந்தி - 14 ஜனவரி 1980 முதல் 31 அக்டோபர் 1984 வரை
- ராஜீவ் காந்தி - 31 அக்டோபர் 1984 முதல் 2 டிசம்பர் 1989 வரை
- விஷ்வநாத் பிரதாப் சிங் - 2 டிசம்பர் 1989 முதல் 10 நவம்பர் 1990 வரை
- சந்திர சேகர் - 10 நவம்பர் 1990 முதல் 21 ஜூன் 1991 வரை
- பி. வி. நரசிம்மராவ் - 21 ஜூன் 1991 முதல் 16 மே 1996 வரை
- அட்டல் பிஹாரி வாஜ்பாய் - 16 மே 1996 முதல் 1 ஜூன் 1996 வரை (13 நாட்கள் அரசு)
- எச். டி. தேவகௌடா - 1 ஜூன் 1996 முதல் 21 ஏப்ரல் 1997 வரை
- ஐ. கே. குஜ்ரால் - 21 ஏப்ரல் 1997 முதல் 19 மார்ச் 1998 வரை
- அட்டல் பிஹாரி வாஜ்பாய் - 19 மார்ச் 1998 முதல் 22 மே 2004 வரை
- டாக்டர். மன்மோகன் சிங் - 22 மே 2004 முதல் 26 மே 2014 வரை
- நரேந்திர மோடி - 26 மே 2014 முதல் தற்போது வரை (மீண்டும் 2019 மற்றும் 2024 தேர்தலில் வெற்றி)

