சிலப்பதிகாரம்
ஐம்பெரும் காப்பியங்களுள் மிகவும் முதன்மையானது சிலப்பதிகாரம் ஆகும்.தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சுவையுடையது. சிலம்பால் உருவான நிகழ்வுகளையும் வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப்பெயர் பெற்றது. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று இந்நூல் அறியப்படுகிறது. இக்காப்பியத்தைப் படைத்த இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சார்ந்தவர். கி.பி. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளங்கோவடிகளைச் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பர்.
இந்நூல் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்ற மூன்று காண்டங்களையும், 'மங்கல வாழ்த்துப் பாடல்' தொடங்கி 'வரந்தரு காதை' ஈறாக முப்பது காதைகளையும் உடையது.
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பன்பது உம்
என்னும் முப்பெரும் உண்மைகளை இந்நூல் கூறுகிறது.
காப்பியச் சுருக்கம்:
பூம்புகாரில் மாசாத்துவான் மகனாகிய கோவலனுக்கும் மாநாய்கன் மகளாகிய கண்ணகிக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் இனிமையாக இல்லறத்தை நடத்தினர். இந்நிலையில் ஆடல், பாடல், அழகு என்ற மூன்றிலும் குறைவுபடாத மாதவி என்ற பெண் கோவலன் வாழ்வில் குறுக்கிடுகிறாள். அவளுடன் சில காலம் வாழ்ந்த கோவலன் ஊழ்வினையால் அவளைப் பிரிந்து விடுகிறான்.
கற்புக்கடம்பூண்ட தெய்வமாகிய மனைவி கண்ணகியை அடைந்த கோவலன், அவள் காற்சிலம்புகளை மூலதனமாகக் கொண்டு இழந்த செல்வத்தை மீண்டும் திரட்ட மதுரை மாநகர் சென்றான். கண்ணகியும் உடன் சென்றாள். ஊழ்வினை தொடர்ந்தது! மதுரையில் கள்வன் எனக் களங்கம் கற்பிக்கப்பட்டுக் கோவலன் கொல்லப்படுகிறான். கதிரவனையும் தன் கற்புத்திரத்தால் பேசவைத்த கண்ணகியால், மதுரை மாநகர் தீப்பிடித்து எரிந்தது. அதன்பின் சேரநாடு நோக்கிச் சென்ற கண்ணகி, தெய்வமாக்கப்பட்டாள்.
காப்பிய நாயகியான கண்ணகியே இக்காப்பியத்தில் முதன்மைப் படுத்தப்படுகிறாள். அவளை அறிமுகம் செய்யவந்த இளங்கோவடிகள்,
போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னுங் கண்ணகியென் பாள்மன்னோ
-என்று பாடுகிறார்.
காப்பியச் சிறப்புகள்:
குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், தேசிய காப்பியம் முதலான சிறப்புப்பெயர்களால் இந்நூல் அழைக்கப்படுகிறது. அரங்க அமைப்பு முறைகள் பற்றிய செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பூம்புகார், மதுரை, வஞ்சிமாநகர் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும், அக்காலச் சமுதாய அமைப்பு, ஆடல் வகைகள், இசைக் கருவிகள், கல்வி, வணிகம் பற்றிய குறிப்புகளையும், மூவேந்தர் ஆட்சிமுறை பற்றிய செய்திகளையும் கூறுகிறது. ஆகவே தமிழர்க்குக் கிடைத்த அரிய காப்பியக் கருவூலமாகச் சிலம்பைக் கருதலாம்.
சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம். கண்ணகியின் சிலம்பால் விளைந்த நிகழ்வை முதன்மையாகக் கொண்டதால் சிலப்பதிகாரம் என்று பெயர் பெற்றது.
நூலமைப்பு:
- இதில் மூன்று காண்டங்கள் உள்ளது. அவை, புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம்.
- இது 30 காதைகளைக்கொண்டது. இதில் புகார்க்காண்டம் 10 கதைகள், மதுரைக்காண்டம் 13 கதைகள், வஞ்சிக்காண்டம் 7 கதைகள் ஆகும்.
- காதி என்பது கதை தழுவியப் பாட்டு என்று பொருளாகும்.
- பாவக்காய் நிலைமண்டில ஆசிரியப்பா ஆகும்.
- சிலப்பதிகாரம் 5001 அடிகளை கொண்டது.
காப்பியம் தோன்றிய காலம்:
கி.பி. இரண்டாம் நீற்ராண்டு. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயில் எடுத்து விளங்க கொண்டாடியபோது இலங்கை மன்னன் கயவாகு உடனிருங்ங்ங் என்பதை இளங்கோவடிகள் வரந்தரு காதையில் கூறியுள்ளார். கயவாகு மன்னனின் ஆட்சி கி.பி. 2- ஆம் நூற்றாண்டு என இலங்கை சரித்திரமாகிய மகாவம்சம் கூறுகிறது.
சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்:
- தமிழின் முதல் காப்பியம்
- உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
- முத்தமிழ்க்காப்பியம்
- முதன்மைக் காப்பியம்
- பத்தினிக் காப்பியம்
- நாடகப் காப்பியம்
- குடிமக்கள் காப்பியம்
- புதுமைக் காப்பியம்
- பொதுமைக் காப்பியம்
- ஒற்றுமைக் காப்பியம்
- ஒருமைப்பாட்டுக் காப்பியம்
- தமிழ்த் தேசியக் காப்பியம்
- மூவேந்தர் காப்பியம்
- வரலாற்றுக் காப்பியம்
- போராட்ட காப்பியம்
- புரட்சிக்காப்பியம்
- சிறப்பதிகாரம்(உ.வே.சா)
- பைந்தமிழ் காப்பியம்
நூலாசிரியர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு:
- நூலாசிரியர் - இளங்கோவடிகள்
- இயற்பெயர் - குடக்கோசேரல்
- நாடு - சேரநாடு
- தந்தை - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
- தாய் - நற்சோணை (சோழநாட்டு இளவரசி)
- தமையன் - சேரன் செங்குட்டுவன்
- சமயம் - சமணம் (அவர் ஏற்றுக்கொண்ட மதம்)
- காலம் - கி.பி. 2-ஆம் நூற்றாண்டு
- சமகாலப்புலவர் - மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச் சாத்தனார்
- துறவு பூண்டதன் காரணம் - இளையவரான இளங்கோவே நாடாள்வார் எனக் கணியன் (சோதிடன்) கூறிய கருத்தைப் பொய்யாக்கும் வண்ணம், இளங்கோவடிகள் இளமையிலேயே துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் தங்கினார்.
நூலாசிரியரின் சிறப்புகள்:
- இவர் அரசியல் வேறுபாடு கருதாதவர். சேர நாட்டைச் சேர்ந்தவராயினும் சோழ, பாண்டிய மன்னர்களைத் தம் நூலில் உயர்த்திக் கூறியுள்ளார்.
- இவர் சமய வேறுபாடற்ற துறவி. இவர் சமண மதத்தைச் சார்ந்திருந்தாலும் பிற மதங்களைப் பழித்துக் கூறாதது இவருடைய சிறப்பாகும்.
- இளமையிலேயே துறவு பூண்டமையால், தம் தமையனிடம் அவர் கொண்டிருந்த பேரன்பும், அரசப்பதவி மீதிருந்த பற்றற்ற தன்மையும் விளங்குகிறது.
முக்கியக் கதாபாத்திரங்கள்:
- கோவலனின் தந்தை மசாத்துவான், கண்ணகியின் தந்தை மாநாய்கன்.
- கோவலனின் தோழன் மாடலன், கண்ணகியின் தோழி தேவந்தி.
- மாதவியின் தோழி சுதமதி, வயந்தமாலை.
- கோவலன், கண்ணகியை வழிநடத்திச் சென்ற கவுந்தியடிகள்.
- கோவலன் கண்ணகிக்கு மதுரையில் அடைக்கலம் கொடுத்த மாதரி.
- 'மண்தேய்த்த புகழினான்' என்று இளங்கோவடிகள் எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்:
மாசறு பொன்னே, வலம்புரி முத்தே
காசறு விரையே, கரும்பே, தேனே "
'பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள'
'காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன்?
‘தேரா மன்னா! செப்புவது உடையேன்’
‘கன்றிய கள்வன் கையது ஆகின்,
கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு’
பாராட்டுரைகள்:
'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்'- என்றோர்
மணியாரம் படைத்த தமிழ்நாடு
- பாரதியார்
'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை’
- பாரதியார்
'முதன்முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்'
- மு.வரதராசனார்
'தேனிலே ஊறிய செந்தமிழின்
சுவை தேறும் சிலப்பதிகாரம்'
- கவிமணி

